தேசிய கொடி அவமதிப்பு விவகாரம் அமேசான் மீது ம.பி போலீஸ் வழக்கு

போபால்: தேசிய கொடியை அவமதித்த விவகாரம் தொடர்பாக அமேசான் நிறுவனம் மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேசியக் கொடிக்கு தனி மரியாதை கொடுக்கப்பட வேண்டும்  என்பதோடு தேசிய கொடியை எங்கு பயன்படுத்த வேண்டும்; எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில், மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் - இந்தியா நிறுவனம், தேசிய கொடி அச்சிடப்பட்ட ‘கீ செயின்’, சாக்லெட், கோப்பைகள், ஆடைகள், காலணிகள் ஆகியவற்றின் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசானில் மூவர்ண அச்சுடன் கூடிய பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற வர்த்தக முறையானது தேசிய கொடி அவமதிக்கும் செயல் என சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக அமேசான்  நிறுவனம் மீது வழக்கு தொடுக்கும்படி காவல் துறை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா  கூறினார். அதையடுத்து போபால் காவல்துறையின் குற்றப் பிரிவு, அமேசான் நிறுவனத்தின் அடையாளம் தெரியாத விற்பனையாளர்கள் மீது நகரவாசி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து போபால் காவல்துறை ஆணையர் மக்ரந்த் தேயுஸ்கர் கூறுகையில், ‘அமேசான் மற்றும் அடையாளம் தெரியாத விற்பனையாளர்களுக்கு எதிராக தேசிய மரியாதை (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 2 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (2) ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories: