சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை இன்று மாலை 6.30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிடுகிறார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி டாக்டர் நக்கீரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இதே கோரிக்கையுடன் டாக்டர் பாண்டியராஜ் உள்பட மேலும் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நிதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என நேற்று உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு இருந்த தடை நீங்கியதால், தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.