திருக்கழுக்குன்றத்தில் வாலிபரை கடத்திய 6 பேர் கைது: கார், கத்தி பறிமுதல்

திருக்கழுக்குன்றம்:   திருக்கழுக்குன்றத்தில் ஒரு வாலிபரை காரில் கடத்தி சென்ற 6 பேர் கும்பலை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.   திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் திலக்ராஜ் (20). இவரது நண்பர், கருமாரப்பாக்கத்தைச் சேர்ந்த புருஷோத் (25). இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்றிரவு திருக்கழுக்குன்றம் அருகே நாவலூர் கூட்ரோடு அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 6 பேர் கும்பல், கத்திமுனையில் புருஷோத்தை மிரட்டி துரத்திவிட்டனர். தனியே நின்றிருந்த திலக்ராஜை மட்டும் 6 பேர் கும்பல் காரில் கடத்தி சென்றது.

இதைத் தொடர்ந்து, திருப்போரூர் அருகே முள்ளிப்பாக்கத்தில் காரை நிறுத்தினர். காருக்குள் இருந்த திலக்ராஜிடம் ₹50 ஆயிரம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என அக்கும்பல் மிரட்டியது. நான் சிறுநீர் கழிக்க வேண்டும் என திலக்ராஜ் காரிலிருந்து இறங்கி மறைவான பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி, திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் திலக்ராஜ் புகார் அளித்தார்.

  இப்புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த காரை தேடி கண்டுபிடித்து, காரில் இருந்த 6 பேர் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இதில், பட்டரவாக்கத்தைச் சேர்ந்த வினோத் (37), கரும்பாக்கத்தை சேர்ந்த பாஷா (31), முருகன் (40), திருவடிசூலத்தைச் சேர்ந்த சேஷா (25), கோதண்டன் (23), மேலையூரைச் சேர்ந்த பிரபாகரன் (24) எனத் தெரியவந்தது.

  மேலும் பிடிபட்ட வினோத், பிரபல ரவுடி படப்பை குணாவின் கூட்டாளி என்பதும், திருக்கழுக்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருந்துள்ளார். அச்சமயம் அவரது பெயரை பயன்படுத்தி திலக்ராஜ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார். இதில் ஆத்திரமான வினோத், திலக்ராஜிடம் ₹50 ஆயிரம் கேட்டு தனது கூட்டாளிகளுடன் காரில் கடத்தி சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திலக்ராஜை காரில் கடத்திய வினோத் உள்பட 6 பேரை கைது செய்து, பல்வேறு வழக்குகள் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: