×

மல்லிப்பட்டினம் அருகே தங்கு கடல் மீன் பிடித்த 2 விசைப்படகுகள்: அதிகாரிகளை கண்டதும் வலையை அறுத்துவிட்டு தப்பினர்

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்ட மீன்பிடி எல்லை பகுதியில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த, விசை படகுகள் வாரம் முழுவதும் தங்கி மீன்பிடிப்பு மேற்கொள்வதால், தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதம் ஏற்படுகிறது. மேலும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் கடல் வளங்கள் முற்றிலுமாக அழிகிறது. இனால் தஞ்சை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் அறிவுரையின் பேரில் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, இரண்டு விசைப் படகுகளில், தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதிகளில் சுமார் 18 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு நேற்று அதிகாலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் ஆனந்தன், மேற்பார்வையாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர் காமராஜ், கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் நவநீதன், கடலோர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், சிறப்பு உதவியாளர் போஸ்நடனம், மற்றும் மீனவப் பிரதிநிதிகள் இருந்தனர்.

தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த, இரண்டு விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. ரோந்து படகுகளை கண்டதும், காரைக்கால் மீனவர்கள் தங்கள் விரித்து வைத்திருந்த வலைகளை அறுத்து விட்டு, அதிகாரிகளிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து அந்த வலைகளை பறிமுதல் செய்து கரைக்கு கொண்டு வந்த அதிகாரிகள் அதில் இருந்த சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை ஏலத்தில் விட்டு, பணத்தை அரசு கணக்கில் செலுத்தினர். மேலும் தப்பி சென்ற இரண்டு விசைப்படகுகள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Mallipatnam , Mallipattinam, Stay Sea, Keyboards,
× RELATED ஏனாமில் 2 பேருக்கு கொரோனா