புதுகை காவிரி பாசன பகுதியில் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரம்: இயந்திரங்கள் மூலம் இரவு பகலாக நடக்கிறது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவிரிப்பாசன பகுதிகளில் இரவு பகலாக இயந்திரங்கள் மூலம் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் வயல்களுக்கு கல்லணைக் கால்வாய் மூலம் காவிரி நீர்ப்பாசனம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடர்;ச்சியாக மழை பெய்தாலும், காவிரி நீர் தேவையை விட அதிகமாக வந்ததாலும் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் வயல்களிலும் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

காவிரி பாசனப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் பெய்த தொடர்மழையின் காரணமாக பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்தன. மேலும் வயல்களில் புகையான், குலைநோய் தாக்குதால் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள வயல்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெல்பயிர்கள் கதிர் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கதிர் அறுவடை இயந்திரங்கள் மூலம் கதிர் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்கள் நெற்கதிர்கள் தரையோடு தரையாக சாய்ந்ததால், தட்டையில் இருந்த நெல்மணிகள் வயல்களில் கொட்டி வீணானது.

இதனால் கதிர் அறுவடைக்கு தாமதமானால் நெல்மணிகள் அதிகளவில் வயலில் கொட்டிவிடும் என்பதால் விவசாயிகள் தங்கள் வயல்களில் உள்ள நெற்கதிரை கதிர் அறுவடை இயந்திரம் மூலம் இரவு பகலாக அறுவடை செய்து வருகின்றனர். கதிர் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளதால், கிராமப்பகுதிகளில் பெரிய அளவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விளைச்சலும் நல்லபடியாக இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: