பாளை சிவன் கோயிலில் தெப்பத்திருவிழா நடத்த வேண்டும்: பக்தர்கள் எதிர்பார்ப்பு

நெல்லை: பாளை திரிபுராந்தீஸ்வரர் சிவன் கோயிலில் சீரமைக்கப்பட்டுள்ள தெப்பத்தில் விரைவில் தெப்பத்திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பாளையில் கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு

வருகின்றன. இக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கோயில் எதிர்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் சித்திரை திருவிழாவின் போது தெப்பத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. காலபோக்கில் தெப்பக்குளம் ஆக்கிரமிப்புகளாலும், கழிவுநீர் தேங்கி சிதிலமடைந்து காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து பக்தர்கள், உழவார பணிக்குழு, சிவனடியார்கள் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தெப்பத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து தெப்பக்குளத்தில் சிதிமடைந்து காணப்பட்ட பாதுகாப்பு சுவர்கள் சீரமைக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் குப்பைகள் கொட்டாதவாறு தெப்பத்தை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் மீது தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தெப்பகுளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டபம் சீரமைக்கப்பட்டது. பாளையங்கால்வாய் மூலம் ராமர்கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர்  கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சிவன் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர்  கொண்டு வரும் மடைகள் தூர்ந்து போனது. இதனால் தண்ணீர் சீராக தெப்பத்திற்கு  வராத நிலை ஏற்பட்டது. இதைதொடர்ந்து தெப்பகுளத்திற்குள் போர்கள் அமைத்து  தண்ணீர் நிரப்பப்பட்டது.  இதைதொடர்ந்து கடந்த ஆண்டு சிவனடியார்கள், உழவார பணிக்குழு, பக்தர்கள் சார்பில் தெப்பத்திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெப்பமும் தெப்பத்திருவிழா நடத்த தயார்படுத்தப்பட்டது.

ஆனால் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தெப்பத்திருவிழா நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் தெப்பத்திருவிழா நடத்த வேண்டி படித்துறையில் இருந்து நீராழி மண்டபத்துக்கு சென்று பக்தர்கள் தினமும் அகல்விளக்கு தீபம் ஏற்றி வருகின்றனர். இந்த ஆண்டிலாவது திரிபுராந்தீஸ்வரர் சிவன் கோயிலில் சித்திரை மாதம் தெப்பத்திருவிழா நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: