திருப்பதி மலைப்பாதையில் பஸ்மோதி பலியான மான் வயிற்றில் இருந்து வெளியேறி உயிர் பிழைத்த மான் குட்டி: பூங்காவில் புட்டி பால் ஊட்டி வளர்க்கப்படுகிறது

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் திருமலையில் இருந்து திருப்பதிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான பரக்காமணி (உண்டியல் காணிக்கை எண்ணும்) ஊழியர்களுக்கான பஸ் நேற்று முன்தினம் மாலை முதலாவது மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையை கடக்க முயன்ற கருவுற்று இருந்த மான் மீது பஸ் மோதியது. இதில், விபத்தில் அடிபட்ட தாய் மான் அங்கேயே உடல் நசுங்கி உயிரிழந்தது. ஆனால் மானின் வயிற்றில் இருந்த குட்டி மான் லேசான காயத்துடன் வெளியே வந்து விழுந்தது.

உயிருடன் சாலை ஓரத்தில் குட்டி மான் அமர்ந்துகொண்டது. இதையடுத்து, அவ்வழியாக வந்த பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குட்டிமானை காப்பாற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் குட்டிமானை மீட்டு, திருப்பதி வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். அங்கு குட்டிமானுக்கு பால் ஊட்டி வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்த மானை வனப்பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் தண்ணீருக்காக வனவிலங்குகள் சாலையை நோக்கி இனிவரும் காலங்களில் வரக்கூடும் என்பதால் மலைப்பாதையில் வரக்கூடிய வாகன ஓட்டிகள் நிதானமாக வர வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

Related Stories: