வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ13 கோடியில் தூர்வாரிய கோட்டை அகழியில் குவியும் குப்பைகளால் செத்து மிதக்கும் மீன்கள்: அதிகாரிகள் கண்காணிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

வேலூர்: வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ13 கோடியில் தூர்வாரப்பட்ட கோட்டை அகழியில் குப்பைகள் கொட்டப்படுவதால், மீன்கள் செத்து மிதக்கின்றன. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மாநகரின் மையப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை அமைந்துள்ளது. சுதந்திர போராட்டத்தில் முக்கியமாக திகழ்ந்த இந்த கோட்டையில் வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ33 கோடியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கோட்டை வளாகத்தில் 2.5 கி.மீ தூரத்துக்கு நடைபாதை, பூங்கா, குடிநீர் வசதி, தகவல் பலகைகள், கேன்டீன் வசதி ஆகிய பணிகளுடன், இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை தவிர்த்து மற்ற பழமையான கட்டிடங்களை அதன் வரலாற்று தகவல்களுடன் புனரமைப்பது என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் சுமார் 3 கி.மீ சுற்றளவுள்ள அகழி முழுவதுமாக நவீன இயந்திரங்கள் மூலம் ரூ13 கோடியில் தூர்வாரப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கோட்டையை சுற்றிலும் இதுவரை இல்லாத வகையில் அகழி முழுமையாக தண்ணீர் நிரம்பி எழிலுடன் காட்சி அளிக்கிறது.

ஆனால் தூர்வாரப்பட்ட அகழியின் கரைகளில் முட்புதர்களும், புல்பூண்டுகளும், செடிகொடிகளும், குப்பைகளும், கழிவு பொருட்களும் ஆங்காங்கே குவிந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வீசிவிட்டு செல்லும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அகழியில் சேர்ந்து வருகிறது. கரையில் இருந்து கைக்கு எட்டிய ஆழத்திலேயே குப்பைகள் தேங்கி மிதந்த போதிலும் அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிளாஸ்டிக்குடன் குப்பைகள் குவிந்துள்ளதால் பெரிய மீன்களும் இறந்து மிதக்கிறது.

தினந்தோறும் மீன்கள் இறந்து அழுகிய நிலையில் தண்ணரீல் மிதப்பதால், சாலையில் செல்பவர்கள் கூட துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அகழி மீண்டும் பாழடைந்து வருகிறது. எனவே அகழியில் சேரும் குப்பைகள், மற்றும் தற்போது செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்றவும், குப்பைகளை அகழியில் யாரும் வீசாத வகையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சியும், தொல்லியல்துறை அதிகாரிகள் இணைந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் கோட்டை அகழியின் எழிலை தொடர்ந்து பராமரிக்க முடியும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

துர்நாற்றம் வீசும் அகழி நீர்

133 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோட்டைக்கு செல்ல கிழக்குப்பகுதியில் நுழைவு வாயில் அமைந்துள்ளது. இக்கோட்டை பழமை மாறாமல் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கற்கோட்டையை சுற்றிலும் சுமார் 200 அடி அகலமும், 25 அடி ஆழமும் கொண்ட அகழி அமைந்துள்ளது. அகழியை மீன்வளத்துறை பராமரித்து வருகிறது. எந்த வகையில் பராமரிப்பு என்று தெரியவில்லை, மீன்களை மட்டும் தினமும் பிடித்து செல்கின்றனர். இந்த அகழி சரியாக பராமரிக்கப்படாததால் அதில் குப்பைகள் காணப்படுகின்றன.

அகழியின் மதகு பகுதியை திறந்து நூறாண்டுகளுக்கு மேலாக தண்ணீரை வெளியேற்றாததாலும் பல ஆண்டுகளாக கழிவுநீர் கலந்து விடுவதாலும் அகழி நீர் துர்நாற்றம் வீசி வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மீண்டும் படகு சவாரி விட்டால் கூட அதனை செயல்படுத்த முடியாத அளவுக்கு தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அகழியின் மதகை திறந்து ஒருமுறையாவது தண்ணீரை முற்றிலும் வெளியேற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அகழி துர்நாற்றத்தில் இருந்து விடுபட்டு புதுப்பொலிவுடன் தூய்மையான தண்ணீர் தேக்க முடியும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Related Stories: