வேலூர் புதிய பஸ் நிலையத்தில் குவிக்கப்பட்ட திடக்கழிவு மூட்டைகளை அகற்ற வேண்டும்: மாநகராட்சிக்கு பயணிகள் கோரிக்கை

வேலூர்: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் குவிக்கப்பட்ட திடக்கழிவு மூட்டைகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் ₹46 கோடி நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. தற்போது 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வேலூர் புதிய பஸ் நிலையம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய பஸ் நிலைய வளாகத்திலேயே அதன் வடகிழக்கு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைந்துள்ளது.

இங்கு புதிய பஸ் நிலையம் மட்டுமின்றி, முத்து மண்டபம் உட்பட சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளின் குப்பைகளும் கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் புதிய பஸ்நிலைய வளாகத்தில் திடக்கழிவு மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததால் துர்நாற்றம் வீசி பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, புதிய பஸ்நிலைய வளாகத்தில் உள்ள குப்பை மூட்டைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக 4வது மண்டல சுகாதார ஆய்வாளர் லூர்துசாமியிடம் கேட்டபோது, ‘வேலூரில் பாகாயம், வேலூர் புதிய பஸ் நிலையம் ஆகிய 2 இடங்களில் மக்கா திடக்கழிவுகள் கொண்டு வரப்பட்டு தினமும் லாரிகள் மூலம் கடப்பா சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. காரணம், தெருக்களில் அமைந்துள்ள மையங்களில் 12 வீல்கள் கொண்ட லாரிகள் செல்ல வழியில்லாததால் இந்த இரண்டு இடங்களில் கொண்டு வரப்பட்டு இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த 23ம் தேதி லாக் டவுன் என்பதால் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்படும்’ என்றார். ஆனால், நேற்றும் அந்த குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்தது.

Related Stories: