உத்தரகாண்டில் கடந்த முறை தோல்வியுற்ற காங். மாஜி முதல்வருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு: பாஜகவில் இருந்து வந்தவரின் மருமகளுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: உத்தரகாண்டில் கடந்த முறை தோல்வியுற்ற காங்கிரஸ் முன்னாள் முதல்வருக்கு இந்த முறையும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவில் இருந்து காங்கிரசில் சேர்ந்தவரின் மருமகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. அதன்படி அம்மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், ராம்நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் 2017ம் ஆண்டு தேர்தலில் ஹரித்வார்-ரூரல் மற்றும் கிச்சா சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஹரன் சிங் ராவத்தின் மருமகள் அனுக்ரிதிக்கு லான்ஸ்டவுன் சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை 64 வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் பாஜகவில் இருந்து காங்கிரசில் இணைந்த மாநிலங்களவை முன்னாள் சபாநாயகர் யஷ்பால் ஆர்யாவுக்கு பாஜ்பூர் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இவரது மகன் சஞ்சீவ் ஆர்யா நைனிடால் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதேபோல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இறந்த காங்கிரஸ் மூத்த தலைவர் இந்திரா ஹிருதயேஷ் மகன் சுமித் ஹிருதயேஷ், ஹல்த்வானி சட்டமன்றத் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். இதுவரை அறிவிக்கப்பட்ட இரண்டு பட்டியல்களிலும் பெரும்பாலான சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: