விரட்டி விரட்டி கடிக்க வரும் குரங்குகள்: வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?

காரைக்குடி: காரைக்குடி அருகே மாலையிட்டான்பட்டியில் குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குழந்தைகளை வெளியே விடவே அச்சமாக இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடி அருகே தி.சூரக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது மாலையிட்டான்பட்டி. இப்பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் சாலைகளில் ஹாயாக குரங்குகள் உலா வருகின்றன. அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து உணவு பொருட்களை சூறையாடுவதோடு விரட்ட வருபவர்களை விரட்டி கடிக்க வருகின்றன.

இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சல் போட்டவுடன் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கின்றன. இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை மற்றும் இரவு நேரங்களில் பயத்துடனே வீட்டிற்குள் இருக்க வேண்டியநிலை உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். செல்லத்துரை கூறுகையில், குரங்குகளின் தொந்தரவு அதிகமாக உள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் வீட்டில் உள்ளனர். அவர்களை குரங்குகள் விரட்டிகடிக்க வருகின்றன.

இதனால் குழந்தைகளை வெளியே விடவே அச்சமாக உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னர் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஊராட்சி தலைவர் முருகப்பன், ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. ஊராட்சியில் தீர்மானம் போட்டு வனத்துறை அனுமதி பெற்று குரங்குகளை பிடிக்க நடவடிக்ககை எடுக்கப்படும். வனப்பகுதிகளில் கொண்டுபோய் விட்டாலும் மீண்டும் வந்துவிடுகின்றன என்றார்.

Related Stories: