சுதந்திர வரலாற்றில் இடம் பிடித்த சிறைச்சாலையை மீண்டும் கட்ட வேண்டும்: திருவாடானை மக்கள் எதிர்பார்ப்பு

திருவாடானை:  சுதந்திர வரலாற்றில் இடம் பிடித்த கிளை சிறைச்சாலைையை மீண்டும் திருவாடானையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் சுதந்திர போராட்டத்தில் திருவாடானை பகுதிக்கு முக்கிய பங்கு உள்ளது. இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான தியாகிகள் சுதந்திர போராட்டத்திற்காக சிறை சென்று பல தியாகங்களை செய்துள்ளனர். திருவாடானையில் தாலுகா அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையம், கிளை சிறைச்சாலை ஆகிய அலுவலகங்கள் வெள்ளையர்கள் ஆட்சியில் இருந்தே ஒரே வளாகத்தில் செயல்பட்டு வந்தது. நூற்றாண்டுகளை கடந்துவிட்ட திருவாடானை கிளை சிறைச்சாலை சுதந்திரப் போராட்டத்தில் நெருங்கிய தொடர்பு உடையதாகும்.

ஆனால் இந்த சிறைச்சாலை இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பூட்டி விட்டதால், கைதிகளை ராமநாதபுரத்திற்கு கொண்டு சென்றனர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த சின்ன அண்ணாமலை, ராமநாதன் ஆகியோர் தேவகோட்டையில் பொதுக்கூட்டம் நடத்தினர். அப்போது பிரிட்டிஷ் அரசு இவர்களோடு 5 பேரை கைது செய்து திருவாடானை கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் இருப்பவர்களை மீட்க வேண்டும் என்ற முடிவில் விளாங்காட்டூரை சேர்ந்த செல்லத்துரை தலைமையில் திருவேகம் பத்தில் கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் சுமார் 2000 பேருக்கு மேல் திரண்டு திருவாடானை சிறைச்சாலைக்கு வந்து சிறையை உடைத்து மீட்க முடிவு செய்யப்பட்டது.

அதே நாளன்று திருவேகம் பத்தில் ஜமாபந்தி நடந்து கொண்டிருந்தது. இதனால் அங்கு கூட்டப்பட்ட கூட்டம் பற்றிய தகவல் ஜமாபந்தி அதிகாரிக்கு தெரியவந்தது. இதையடுத்து தங்களது மேலதிகாரிக்கு அவர் தகவல் தெரிவித்தார். அடுத்து மதுரையிலிருந்து போலீஸ் பட்டாளம் திருவாடானை நோக்கி வரத்தொடங்கியது. திருவேகம்பத்தில் இருந்து வெகுண்டு எழுந்த சுதந்திர போராட்ட வீரர்கள் திருவாடானைக்கு திரண்டு வந்தனர். திருவாடானைக்கு வரும் முன்னரே நன்னி என்பவரை அனுப்பி சாலையில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்டி சாய்த்து போட்டனர். ஜெயராம் ஐயர் என்பவருக்கு தகவல் தொடர்பு சாதனங்களை துண்டிக்க வேண்டும் என கட்டளை இட்டனர்.

இவர்கள் இருவரும் இந்த பணியை கச்சிதமாக முடித்தனர். இதனால் போலீசார் மரங்கள் வெட்டி கிடப்பதால் குறித்த நேரத்திற்கு வர இயலவில்லை. 2 ஆயிரம் பேர் திரண்டு வந்த இந்த கூட்டம் திருவாடானை கிளை சிறைச்சாலையை உடைத்து சின்ன அண்ணாமலையுடன் சிறையில் இருந்தவர்களை மீட்டது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கண்டதும் அங்கு சிறிய அளவில் இருந்த போலீசாரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவர்கள் அனைவரும் ஒதுங்கிக் கொண்டனர். அதோடு சிறைச்சாலை, நீதிமன்றம், தாலுகா அலுவலகம், கிளை கருவூலம், பத்திரப்பதிவு அலுவலகம் என அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தியது.

பின்னர் அந்த சிறைச்சாலையை மீண்டும் புனரமைத்து சுதந்திரப் போராட்டங்களில் பங்கு பெற்றவர்களை இதே சிறையில் வைத்து சித்திரவதை செய்தனர். இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறைச்சாலை மீண்டும் திருவாடானையில் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நல்லாசிரியர் (ஓய்வு)உதயகுமார் கூறுகையில், ‘‘சுதந்திர வரலாற்றோடு தொடர்புள்ள திருவாடானை கிளை சிறை கடந்த 5 ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. விசாரணைக் கைதிகளை ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்கின்றனர். இதனால் போலீசாருக்கு பணிச்சுமையும் கைதிகளை பார்க்கவரும் உறவினர்களுக்கு தேவையற்ற அலைச்சலும் ஏற்படுகிறது.

திருவாடானை சப் டிவிஷனை சேர்ந்த தொண்டி, திருப்பாலைக்குடி, எஸ்பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை உட்பட காவல் நிலையங்களில் பதியப்படும் வழக்குகள் சம்பந்தமாக கைதிகளை மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு போலீசார் அழைத்துச் செல்கின்றனர். அதில் பல்வேறு கஷ்டங்கள் உள்ளன. நீதிமன்றம் கட்ட ரூ.2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறை இருந்த இடத்திலேயே பழுதான கட்டிடத்தை அகற்றி விட்டு, மீண்டும் அதே இடத்தில் கட்டலாம். அரசு நிதி ஒதுக்கியுள்ள இடமும் உள்ளது.

ஆனால் அந்த இடம் தாலுகா அலுவலகத்தின் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சிறைச்சாலைக்கு என நிலைமாற்றம் செய்ய வேண்டும். அதற்கான கோப்பு சென்னை வரை செல்ல வேண்டும் என கூறப்படுகிறது. எனவே வரலாற்று சிறப்புமிக்க கிளை சிறையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: