பிப்ரவரி மாதத்தில் 10, 11, 12ம் வகுப்புகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளோம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: 10, 11, 12ம் வகுப்புகளை பிப். மாதத்தில் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதகா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் கட்டாயம் ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

“அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முதலமைச்சர் எவ்வளவு முயற்சி செய்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். அரசு பள்ளிகளை மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம், இருமொழி கொள்கைதான் நமது கொள்கை, அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை ஓய்ந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பரில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பருவமழை ஓய்ந்து டிசம்பர் மாதத்தில் இருந்தாவது நேரடி வகுப்புகளை நடத்தலாம் என பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டிருந்தநிலையில், கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைய தொடங்கியது.

இதனால் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி மாதத்தில் 10, 11, 12ம் வகுப்புகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரை செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: