பழநி அருகே ரயில்வே சுரங்க பாதையில் 1 மாதமாக தண்ணீர் தேக்கம்: கிராமமக்கள் அவதி

பழநி: திண்டுக்கல்- பழநி- பொள்ளாச்சி அகல ரயில்பாதை வழித்தடத்தில் ஏராளமான ரயில்வே சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதிக்காக அமைக்கப்பட்ட இப்பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் இப்பாதையை பயன்படுத்தும் கிராமமக்கள் தண்ணீரில் நீந்தி தங்களது ஊர்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதன்படி பழநி அருகே தெ.லட்சலப்பட்டி செல்லும் சாலையில் நாகூர் பிரிவு அருகே உள்ள ரயில்வே சுரங்க பாதையில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளதாக தெரிகிறது.

இதனால் இப்பாதையை பயன்படுத்தும் போலம்மாவலசு, மல்லையகவுண்டன்வலசு, லட்சலப்பட்டி உள்ளிட்ட கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். டூவீலர்கள் நீரில் செல்லும் போது அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. பெண்கள், முதியவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, ரயில்வே நிர்வாகம் சுரங்க பாதையினுள் தண்ணீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: