குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் உலா வந்த யானைகள்

குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் காலை மற்றும் மாலை நேரங்களில் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த ஒரு வார காலமாக ஹில் குரோவ், ரன்னிமேடு ரயில் நிலையத்திற்கிடையே குட்டியுடன் 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. அந்த யானைகள் அந்த பகுதியிலுள்ள குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. மேலும் மலை ரயில் வரும்போது உணவு மற்றும் தண்ணீருக்காக தண்டவாள பகுதிக்கு யானைகள் வருகின்றன. தண்டவாளத்தை அவை கடந்து செல்வதால் மலை ரயில் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

ரயில் பாதையில் மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் யானை நடமாட்டத்தால் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். இப்பகுதியையொட்டி உள்ள பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் மக்களும் யானைகளால் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் காட்டு யானையை கண்காணித்து அவற்றை வனத்திற்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: