கடற்கொள்ளையர் தாக்குதல்... கடல்சேறால் கடும் அவதி.... வேதனையில் தவிக்கும் வேதாரண்யம் மீனவர்கள்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் மணியன்தீவு, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன் மகாதேவி உள்ளிட்ட 20 மீவை கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் 65 விசைபடகுகளும், 1400 பைபர் படகுகளும் உள்ளன, மேலும் கோடிக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலம் ஆகும். இந்த சீசன் காலத்தில் நாகை, திருவாருர், தஞ்சை, தூத்துகுடி ராமநாதபுரம், கடலூர், மாயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 500 விசை படகு, வல்லம், பைபர்படகுகளுடன் கோடிக்கரையில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த சிசன் காலத்தில் உள்ளூர் படகுகளுடன், வெளிமாவட்ட படகுகளும் சேர்ந்து நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடலில் மீன் பிடிக்க செல்கின்றனர். நாகை மாவட்ட கடற்கரை பகுதியில் ஏற்கனவே இரட்டைமடி, சுருக்கு மடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன்வளம் முற்றிலும் பாதிக்கபட்டுள்ளது. இந்நிலையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்வதால் மீன் கிடைக்கதால் பல மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வெறும் கையோடு கரை திரும்புகின்றனர். சில மீனவர்கள் ஏதாவது மீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்பில் இரண்டு நாள் தங்கி மீன்பிடிக்கின்றனர். அவ்வாறு தங்கி மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படை இலங்கை கடற்கொள்ளையர்கள், இலங்கை தமிழ் சிங்கள மீனவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சீனா நாட்டு மீனவர்களால் தாக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது.

இருப்பினும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமே என்ற நோக்கில் மீனவர்கள் தங்களது தொழிலை மழை, பனிக்குளிர் என்று பாராமல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தினந்தோறும் தாக்குதலுக்கு ஆளகும் மீனவர்கள் அதை வெளியில் செல்லுவதில்லை, அதற்கு காரணம் மீண்டும் மீன் பிடிக்க செல்லவேண்டும் என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், பிழைப்பு கெட்டு போய்விடுமோ என்ற எண்ணமும் அதிகம் உள்ளது. தூப்பாக்கி சூடு, அரிவாள்வெட்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனால் மட்டுமே கடலோரக் காவல் குழுமத்திற்கு தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற் கொள்ளையர்கள், கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகும் மீனவர்களுக்கு மேலும் ஒரு பலத்த சோதனையாக புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் சேறு தள்ளி உள்ளது. இதில் அதிகப்படியாக புஷ்பவனம் கடற்கரை பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேறு தள்ளி உள்ளது. அதனால் கடலில் படகுகளை செலுத்த முடியாமல் ஒரு மாத காலமாக மீன்பிடிக்க முடியமால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதித்து மிகுந்த அவதிப்படுகின்றனர். நேற்று முன்தினம் மிகுந்த சிரமத்துக்கு இடையே மீன் பிடிக்கச் சென்ற புஷ்பவனம் மீனவர்களின் படகில் இரண்டு தடவை தாக்கப்பட்டு லட்சக்கணக்கான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அடிமேல் அடிவிழுந்ததாக உள்ளது.

ஒருபுறம் கடலுக்கு செல்ல முடியாமல் கடல் சேற்றினால் அவதிப்பட்டு மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே மீன்பிடித் தொழிலை செய்து வரும் மீனவர்களின் உடமைகளை இலங்கை மீனவர்களினால் அழிக்கப்படுவதால் வேதாரண்யம் மீனவர்கள் கண்ணீரில் மிதக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடருவதால் மீன்பிடி தொழில் செய்யவே மீனவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க இந்திய கடலோர கப்பலை கோடியகரைக்கு அருகே நிறுத்தி மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல மத்திய அரசு மீனவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காது, மேலும், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தவறினால் மீனவர்களின் மீன்பிடி தொழில் எதிர்காலத்தில் கேள்விக்குறி ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை.

Related Stories: