வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவுகிறது. அதே நேரத்தில் இரவு நேரங்களில் கடும் குளிர் காற்று வீசி வருகிறது. காலையில் பனிப்பொழிவும் நிலவுகிறது. பகலில் வெயில் சுட்டெரிக்கிறது.

இந்த சூழ்நிலையில், வெப்ப சலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது தென் தமிழகப் பகுதியில்  இருந்து ராயலசீமா வரை பரவியுள்ளது. இதன் காரணமாக  தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்தது.

அதேபோல இன்றும் மேற்கண்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். 27ம் தேதி தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 28 மற்றும் 29ம் தேதிகளில் தென் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related Stories: