மகளிரணி நிர்வாகியை அவதூறாக பேசிய புகார் அதிமுக எம்எல்ஏ முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

திருவில்லிபுத்தூர்: மகளிரணி நிர்வாகி புகாரில் தேடப்பட்டு வரும் அதிமுக எம்எல்ஏ முன்ஜாமீன் மனு மீதான விசாரணை திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அதிமுக மகளிர் அணியை சேர்ந்தவர் ரீட்டா. இவர், திருவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏவான மான்ராஜ், தன்னைப்பற்றி தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக திருவில்லிபுத்தூர் நகர் போலீசாரிடம் புகாரளித்தார். இதுதொடர்பாக போலீசார், அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் ராமையா பாண்டியன், முனியாண்டி மற்றும் இன்னாசி அம்மாள் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து தலைமறைவான எம்எல்ஏ மான்ராஜை, 3 தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், எம்எல்ஏ மான்ராஜ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.  நீதிபதி தனசேகரன் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

மேலும் ஒரு பெண் நிர்வாகி புகார்: எம்எல்ஏ மான்ராஜ் மீது, திருவில்லிபுத்தூர் அதிமுகவை சேர்ந்த மற்றொரு பெண் நிர்வாகி, திருவில்லி. நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில்,  எம்எல்ஏ மான்ராஜிம், இளம்பெண் ஒருவரும் பேசும்போது என்னை பற்றி பேசியுள்ளனர். இதனால் நான் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: