வீட்டை விட்டு காதலர்கள் ஓட்டம்; மின்கம்பத்தில் கட்டி வைத்து காதலனின் தாயாருக்கு அடி: திருச்சுழி அருகே பரபரப்பு

திருச்சுழி: திருச்சுழி அருகே வீட்டை விட்டு காதலர்கள் ஓடிய விவகாரத்தில் பெண் வீட்டார், காதலனின் தாயாரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கே.வாகைகுளத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (45). இவரது மகன் சக்திசிவா (24). பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த 19 வயது பெண்ணும் காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஊருக்கு வந்த சக்திசிவா கடந்த 22ம் தேதி காதலியுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

நேற்று சக்திசிவாவின் தாயார் மீனாட்சி, உறவினர் அழகம்மாள் வீட்டில் இருந்தபோது, பெண்ணின் தாய், உறவினர்களுடன் வந்து மகளை அனுப்பி வைக்குமாறு கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து மீனாட்சியை தரதரவென ரோட்டில் இழுத்து வந்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த பரளச்சி போலீசார் மீனாட்சியை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதுகுறித்த புகாரில் பெண்ணின் தாய், அவரது உறவினர்கள் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: