பல கோடி ரூபாய் முறைகேடுகள் தொடர்பாக மதுரை ஆவினில் விஜிலன்ஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை: மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு மேலும் சிக்கல்

மதுரை: மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த 2019 முதல் 2021 பிப்ரவரி வரை பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. பொதுமேலாளர், உதவி பொதுமேலாளர்கள் உள்ளிட்ட 61 காலியிடங்களுக்கான நியமனங்களில் டிடிக்கள் மோசடி, வினாத்தாள் வெளியானது, தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு அழைக்காதது உட்பட பல்வேறு விதிமீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த 15 பேருக்கு முறைகேடாக பணியிடங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

அதேபோல் பொதுமேலாளர் பெயரில் பில் போட்டு, ஆவின் நெய் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவினுக்கு தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்ததிலும், சோலார் பேனல்கள் அமைத்ததிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. தவிர, திருப்பதி கோயிலுக்கு ஆவின் நெய் அனுப்பியதிலும் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து, ஆவின் தொழிலாளர்கள், சென்னையில் உள்ள இயக்குநருக்கு புகார்கள் அனுப்பினர்.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், சென்னை தணிக்கை பிரிவு இணை இயக்குநர் குமரேஸ்வரி தலைமையில் 7 மாவட்டங்களின் ஆவின் உதவி இயக்குநர்கள் (தணிக்கை) குழு ஒரு வாரம் ஆய்வு நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. ஆவணங்களை ெசன்னைக்கு கொண்டு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் மேலும் பல முறைகேடுகள் அம்பலமாகின.

இதையடுத்து கோவை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள ஆவின் தணிக்கை உதவி இயக்குநர்கள் மற்றும் சென்னையில் உள்ள விஜிலன்ஸ் கமிட்டி டிஎஸ்பி சத்தியசீலன் ஆகியோர் தலைமையிலான கூட்டுக்குழு நேற்று முன்தினம் இரவு மதுரை ஆவின் நிறுவனத்திற்கு வந்து, அதிரடியாக சோதனையை துவக்கினர். நேற்றும் தொடர்ந்து 2ம் நாளாக ஆய்வு நடந்தது. ஆய்வில் முறைகேடுகள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் பெண் அதிகாரி காயத்ரி உள்ளிட்ட பலரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த முறைகேடுகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆவின் நிறுவனத்தின் பொதுமேலாளர்களான ஜெய, ஜனனி சவுந்தர்யா, கருணாகரன் மற்றும் பொறியாளர் ஒருவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் இதில் விரைவில் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

Related Stories: