வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்; மதுரை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

நெல்லை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் நெல்லையைச் சேர்ந்த மதுரை நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரி வீட்டில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, அன்பு நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சுகுமார் (42). இவர் மதுரை நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கனவே 2015 முதல் 2020 வரை சேரன்மகாதேவி ஆர்டிஓவின் நேர்முக உதவியாளராகவும், பின்னர் துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி கலால் துறை உதவி கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.50 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை அன்புநகரில் உள்ள சுகுமாரின் வீட்டில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. மேலும் அவரது பெயரில் வங்கி லாக்கரிலும் முக்கிய ஆவணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரது வங்கி லாக்கரிலும் போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதேபோல் மதுரை, சாத்தமங்கலம், அண்ணாநகரில் தற்போது சுகுமார் குடியிருக்கும் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கையும், களவுமாக சிக்கியவர்: சுகுமார் ஏற்கனவே தூத்துக்குடியில் 2020ல் கலால் பிரிவு உதவி ஆணையராக பணியாற்றிய போது, அந்த ஆண்டு பிப். 13ம் தேதி குரும்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் பணம் வசூலித்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைப் பிடித்து அவரிடமிருந்து ரூ.75 ஆயிரம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

Related Stories: