தமிழகம் முழுவதும் 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்: அண்ணா பல்கலை தொழில்நுட்ப நிபுணர் குழு அறிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் 25 ஆண்டுகள் பழமையான மொத்தம் 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைகழக தொழில்நுட்ப நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கிராமத்தெரு குடிசைமாற்று வாரிய கட்டிடம், கடந்த டிசம்பர் 27ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. டி பிளாக்கில் உள்ள 24 வீடுகள் தரைமட்டமாயின. கட்டிட விரிசலை கண்டு மக்கள் முன்கூட்டியே வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.  

இதையடுத்து மீதமுள்ள 62 திட்டங்களுக்கு உட்பட்ட 17 ஆயிரத்து 734 குடியிருப்புகளை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த தமிழ்நாடு நகர்ப்புற வசிப்பிட மேம்பாட்டு வாரியத்தின் (குடிசை மாற்று வாரியம்) மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழக மண்ணியல் மற்றும் கட்டிடவியல் நிபுணர்களை உள்ளடக்கிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் அண்ணா பல்கலைகழக தொழில்நுட்ப நிபுணர்கள் குழு, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் தங்களுடைய ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள குடியிருப்புகள் கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி 129 திட்டங்கள் மூலமாக 22 ஆயிரத்து 271 குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் 20 ஆயிரத்து 453 குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளதால் அவற்றை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள வேண்டும். முதல்கட்டமாக இந்த வருடத்தில் 7 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் ஒதுக்கி அவர்களை குடியிருப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும். வருகிற ஆண்டில் 15 ஆயிரம் வீடுகள் அடையாளம் காணப்பட்டு அங்கு வசிப்பவர்களை இடமாற்றும் செய்து குடியிருப்புகளை இடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: