துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது வீட்டின் மேற்கூரையில் குண்டு பாய்ந்தது: பெரம்பலூர் அருகே பரபரப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்களம் கிராம எல்லையில் பச்சை மலையடிவாரத்தில் காவல்துறையின் துப்பாக்கி சுடும் தளம் உள்ளது. இந்த தளத்தில் கடந்த 21ம்தேதி முதல் 24ம் தேதி வரை திருச்சி ஆர்பிஎப் (ரயில்வே பாதுகாப்பு படை) போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டனர்.

நேற்றுமுன்தினம் காலை 11.30 மணிக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது ஒரு வீரரின் துப்பாக்கியிலிருந்து வெடித்த குண்டு, மலையின் பின்புறம் ஒரு கி.மீ தூரத்தில் ஈச்சங்காடு காட்டுக்கொட்டகை கிராமத்தில் வசிக்கும் சுப்ரமணியன் (61) என்பவர் வீட்டின் ஆஸ்பெட்டாஷ் சீட் கூரையில் பாய்ந்தது.

இந்த துப்பாக்கி குண்டு ஓட்டை வழியாக வீட்டுக்குள் விழுந்ததால் உள்ளே இருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக சுப்ரமணியன் பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு துப்பாக்கி குண்டை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. மணி அந்த வீட்டின் மேற்கூரையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். துப்பாக்கி குண்டு எப்படி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மலைக்குன்றை கடந்து வந்திருக்கும், அது எந்த வகை துப்பாக்கி குண்டு, எவ்வளவு திறன் வாய்ந்தது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் எஸ்.பி. மணி கூறுகையில், ரயில்வே பாதுகாப்பு படையினர் பயன்படுத்தியது 7.62 எம்எம் ரகம் கொண்ட புல்லட். துப்பாக்கிகள், புல்லட்டுகளை ஆர்பிஎப் வீரர்கள் ஒப்படைக்கும் போதுதான் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் திறன் பற்றி முழுமையாக தெரிய வரும் என்றார்.

Related Stories: