மும்பையின் பிரபல கம்பெனி பெயரில் போலி காசோலை தயாரித்து ரூ.6.60 கோடி மோசடி முயற்சி: தனியார் வங்கி காவலாளி கைது

ஈரோடு, ஜன. 26: ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் சதீஷ் (46). தனியார் வங்கி காவலாளி. இவர் ஈரோட்டில் உள்ள எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர், எஸ்பிஐ வங்கிக்கு சென்று ஒரு காசோலையை வழங்கி, அதில் உள்ள தொகையை அவரது கணக்கில் சேர்க்கும்படி கூறியுள்ளார்.

அந்த காசோலையில் விக்டல் லெபாரட்டரி பிரைவேட்  லிமிடெட் என்ற நிறுவனம் சதீஷ் பெயரை குறிப்பிட்டு ரூ.6 கோடியே 60 லட்சம் வழங்கும்படி குறிப்பிட்டிருந்தது. இதைப்பார்த்த வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து, சதீஷின் வங்கி கணக்ைக ஆய்வு செய்தனர். அப்போது, இதுவரை ஒரு லட்ச ரூபாய்க்கு கூட வரவு, செலவு செய்யாமல் இருப்பது தெரியவந்தது. எனவே திடீரென சதீஷ் பெயருக்கு இவ்வளவு பெரிய தொகைக்கு காசோலை வழங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள விக்டல் லெபாரட்டரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அந்நிறுவனத்தினர் சதீஷ் என்ற பெயரில் காசோலை வழங்கவில்லை என்றும், அந்த காசோலைக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து எஸ்பிஐ வங்கியின் உதவி மேலாளர் ரிஷிகுமார், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் ஈரோடு தெப்பக்குளம் வீதியில் சதீஷை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சதீஷ் வங்கியில் அளித்தது போலியான காசோலை என்பது தெரியவந்தது. சதீஷை கைது செய்த போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: