பல்வேறு துறைகளை சேர்ந்த 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு; பிபின் ராவத், கல்யாண் சிங்குக்கு பத்ம விபூஷண்: சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளாவுக்கு பத்ம பூஷண்

புதுடெல்லி: பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 128 பேருக்கு பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதில் மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்குக்கு பத்ம விபூஷண் விருதும், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளாவுக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, மருத்துவம், சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது.

இந்தாண்டில் 4 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 34 பேர் பெண்கள்; 10 பேர் வெளிநாட்டவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆவர். இதைத் தவிர, 13 பேருக்கு மறைவுக்குப் பிறகு இவ்விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியான மறைந்த பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மறைந்த கல்யாண் சிங்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் நிறுவனர் சைரஸ் பூனவல்லா மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ணா எல்லா மற்றும் அவரது மனைவி சுசித்ரா எல்லா தம்பதி,  டாடா குழுத் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, கூகுள் நிறுவன சிஇஓவான சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கும், மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓவான இந்திய வம்சாவளி சத்ய நாதெள்ளாவுக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் முதல் முறையாக 2 தங்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையை படைத்த தேவேந்திர ஜஜாரியாவுக்கு பத்ம பூஷண் விருதும், ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த அரியானாவின் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் பாலிவுட் திரைப்பட பின்னணி பாடகர் சோனு நிகம் ஆகியோருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்படவில்லை. பழம்பெரும் திரைப்பட நடிகை சவுகார் ஜானகி, தமிழ் பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகளை வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார்.

Related Stories: