வௌ்ளப்பெருக்கால் சேதமான தரைப்பாலம் சீரமைப்பு: போக்குவரத்து துவக்கம்

ஊத்துக்கோட்டை: மெய்யூர் பகுதியில் கனமழையால் 2 முறையாக  துண்டிக்கப்பட்ட தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. ஊத்துக்கோட்டை மற்றும் பூண்டி அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் பூண்டி ஏரி நிரம்பியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், கொசஸ்தலை ஆற்றின் வழித்தடமான மெய்யூர் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி கரைப்புரண்டு ஓடிய வௌ்ளத்தால் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.

இதனால், மெய்யூர் ஆவாஜிபேட்டை, வெம்பேடு, செம்பேடு, வெங்கல், மாளந்தூர், எரையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், அரும்பாக்கம், மேலானுர், மூலக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் - மெய்யூர் போக்குவரத்தின்றி அவதிப்பட்டு வந்தனர். மேலும், திருவள்ளூர் செல்ல வேண்டுமானால் சீத்தஞ்சேரி அல்லது வெங்கல் வழியாக செல்ல வேண்டும். அவ்வாறு இவர்கள் செல்ல 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிகொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 40 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து இன்றி மெய்யூர் மக்கள் அவதிப்பட்டனர்.

இதற்கிடையில், 40 நாட்களுக்கு பிறகு கடந்த சில நாட்களாக சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் 30, 31ம் தேதி 2 நாட்களாக மீண்டும் மழை பெய்தது. இதனால், பூண்டி ஏரி நிரம்பியது. மேலும், ஏரியின் பாதுகாப்பு கருதி அப்போது வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், சீரமைக்கப்பட்ட மெய்யூர் கிராம தரைப்பாலம் மீண்டும் உடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்நிலையில், தற்போது போக்குவரத்தின்றி தவித்த அப்பகுதி மக்களுக்காக மெய்யூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மக்களின் கோரிக்கைக்யை ஏற்று மெய்யூர் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது. இதனால் தற்போது, போக்குவரத்து தொடங்கியுள்ளது. மேலும், புதிய பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: