பாலத்தில் இருந்து கார் விழுந்து விபத்து பாஜ எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

வார்தா: வார்தா அருகே பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்த விபத்தில்  மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  பலியானவர்களில் ஒருவர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏவின் மகன். மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டம், சவாங்கியில்   உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து  வந்த 7 பேர்  நேற்று முன்தினம்  மாணவன் ஒருவரின் பிறந்தநாளை  கொண்டாடிவிட்டு வீடு திரும்பினர். அப்போது நாக்பூரில் இருந்து வார்தா மாவட்டத்தில் உள்ள செல்சூரா  கிராமம் அருகே வந்தபோது அந்த கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்து பயங்கர  விபத்தில் சிக்கியது. இதில் 7 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  பலியாகினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் 7 பேரின் உடல்களையும்  மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும் விபத்து  மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த  விபத்தில் கார் உருத்தெரியாதபடி முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டது. இறந்தவர்களில் ஒருவன் திரோரா தொகுதி பா. ஜனதா  எம்.எல்.ஏ.  விஜய் ரகண்டாலேயின் மகன் அவிசாகர் என தெரியவந்துள்ளது.

ரூ.2 லட்சம் நிவாரணம் : கார் விபத்தில் 7 பேர் பலியானது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் `7 மாணவர்கள் இறந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்றும், பிரதமர்  நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம்  வழங்கப்படும்’ என்றும் அறிவித்துள்ளார்.

Related Stories: