எதிர்கால சவால்களை எதிர்கொள்ள கூடிய வலிமையான இந்தியா உருவாகிறது: ஜனாதிபதி ராம்நாத் உரை

புதுடெல்லி: நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: நமது ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை மற்றும் துடிப்பு உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. இந்த ஒற்றுமை மற்றும் ஒரே தேசம் என்ற உணர்வே ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா போன்ற அசாதாரண சூழல் தொற்றுநோய் மேலாண்மையை மிகவும் கடினமாக்கும் என கருதப்பட்டது. ஆனால் இதுபோன்ற கடின காலத்தில் தான் நம் தேசத்தின் மீள்தன்மை பிரகாசிக்கிறது. கொரோனா வைரசுக்கு எதிராக ஒப்பிட முடியாத உறுதியை நாம் காட்டியுள்ளோம் என்பதில் பெருமைப்படுகிறேன்.

டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கடினமான சூழலில் உயிரையும் பணயம் வைத்து நீண்ட நேரம் பணியாற்றினர். வைரஸ் தொற்றால் நாம் பல உயிர்களை இழந்தாலும், ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பது ஆறுதலான விஷயம். ஒருபுறம் உயிர்களை மருத்துவர்கள் காப்பாற்ற மறுபுறம் விவசாயிகள் உள்ளிட்டோர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவினர்.

சமூக விலகலை கடைபிடிக்கும் தற்போதைய சூழல் நம் அனைவரையும் இன்னும் நெருக்கமாக்கி உள்ளது. ஆயுதப்படையில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் ஆண்டாக இது அமைந்திருக்கிறது. இந்தியா ஒரு பழமையான நாகரீகம் கொண்ட இளமையான குடியரசாக உள்ளது. இதன் மூலம் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கான வலிமையான மற்றும் உணர்ச்சிமிக்க  நாடாக உருவாகி வருகிறது. நேதாஜியின் சுதந்திர வேட்கை மற்றும் இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும் என்ற அவரது லட்சியம் நம் அனைவரையும் ஊக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: