இலவச வாக்குறுதிகள் தேர்தல் நேர்மையை பாதிக்கும்: ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: தேர்தல் நேரத்தில் வழங்கப்படும் இலவச வாக்குறுதிகள் அதன் நேர்மையை பாதிக்கும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நான்கு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசு மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேற்று நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் கடந்தவாரம் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இம்மனுவானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘ இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கும் கட்சிகளின் சின்னத்தை முடக்கி, அதன் பதிவையும் ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் தனி சட்டம் வேண்டும் என கேட்கிறீகளா? என்றார். அதற்கு பதிலளித்த மனுதாரர், ஒன்றிய அரசை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய சொல்லுங்கள் என தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதி உத்தரவில், ‘இலவச வாக்குறுதிகள் என்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும் என தெரிவித்த தலைமை நீதிபதி, நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க ஒன்றிய அரசு மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

தலைமை நீதிபதி கவலை: வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒரு செய்தியை தெரிவித்தார். அதில்,‘‘உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பல நீதிபதிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதேபோல் நீதிமன்றம் மற்றும் பதிவாளர் அலுவலகங்களின் ஊழியர்களில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை மிகவும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இருப்பினும் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

Related Stories: