முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆர்பிஎன் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்: பாஜவில் இணைந்தார்

புதுடெல்லி:  காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆர்பிஎன் சிங் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் பாஜவில் இணைந்தார். உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி தாவல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரான ஜிதின் பிரசாதா கடந்த ஆண்டு கட்சியை விட்டு வெளியேறி பாஜவில் இணைந்தார். அதன் பின்னர் அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் குஷிநகர் முன்னாள் காங்கிரஸ் எம்பி மற்றும் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர் ஆர்பிஎன் சிங். ஜார்கண்ட் காங்கிரஸ் விவகாரங்கள் பொறுப்பாளராக இருக்கும் இவர், தான் புதிய அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக டிவிட்டரில் நேற்று திடீரென அறிவித்தார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு எழுதிய கடிதத்தில், ‘‘காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். இந்த நாட்டிற்கும், மக்களுக்கும், கட்சிக்கும் சேவை ஆற்றுவதற்காக எனக்கு வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி  தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த டிவிட்டர் பதிவுகளில் ஆர்பிஎன் சிங், ‘எனக்கு இது புதிய தொடக்கம். பிரதமர் நரேந்திரமோடி, பாஜ தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நாட்டை கட்டியெழுப்புவதற்கான எனது பங்களிப்பை எதிர்பார்த்திருக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் பாஜவில் இணைந்தார்.  

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் எம்பி ஆனந்த் பிரகாஷ் கவுதம் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் இரவு அறிவித்தார். உள்ளூர் மற்றும் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலவும் உட்கட்சி குழப்பத்தினால் அதிருப்தி அடைந்து கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: