வணிகர்களின் நலன் கருதி கோவை, மதுரை தீர்ப்பாயத்துக்கான அதிகார வரம்பு எல்லைகள் மாற்றம்

சென்னை: தமிழக அரசின் வணிகவரித்துறை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வு சென்னையில் செயல்படுகிறது. அதன் கூடுதல் அமர்வுகள் மதுரை, கோவை ஆகிய இடங்களில் செயல்படுகிறது. இந்த தீர்ப்பாயத்தில் மாவட்ட நீதிபதி தலைமையிலான அமர்வு அமைக்கப்படுகிறது. இதை தவிர்த்து உறுப்பினர்களாக வணிகவரித்துறை அலுவலர்கள், இந்திய தணிக்கை துறை அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த தீர்ப்பாயத்தின் வரி விதிப்பு மற்றும் இதர பிரச்னைகள் தொடர்பாக இந்த தீர்ப்பாயத்தில் வணிகர்கள் முறையிடலாம். தீர்ப்பாயத்தின் மூலம் கடந்த 2020-21ல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை, மதுரை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய வரும் வணிகர்கள் அலைய வேண்டி இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக, கரூர் பகுதி மதுரை தீர்ப்பாயத்தில் இருந்ததால், வழக்கிற்காக அங்கிருந்து வர வேண்டிய நிலை இருப்பதால் அதிகார வரம்பு எல்லையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டன. இதையேற்று வணிகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி அதிகார வரம்பு எல்லையை மாற்றியமைத்து தமிழக அரசிதழில் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: மதுரை தீர்ப்பாயத்துக்கு உட்பட்டதாக மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும், கோவை தீர்ப்பாயத்துக்கு உட்பட்டதாக கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், திருப்பூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் இடம்பெறும் என்று தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பு எல்லைகள் மாற்றியமைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: