எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு நயினார் நாகேந்திரன் ஆண்மையை நிரூபிக்க அதிமுகவினர் சவால்

சென்னை: நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் சமூக வலைதளங்களிலும் டிவிட்டர் பக்கத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகிகள் சிங்கை ராமச்சந்திரன், ராஜ்சத்தியன் ஆகியோர் கூறும்போது, நீங்கள் வேண்டுமானால் அதிமுக தோள் மீது தொற்றிக் கொண்டு பெற்ற எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிரூபியுங்களேன். ஆண்மை என்பது சொல் அல்லது செயல் என்று கூறியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக பெரவள்ளூர் காவல்நிலையத்தில் அதிமுகவின் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாஜவின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதன் பின்பு பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நயினார் நாகேந்திரன் தொலைபேசி மூலமாக எங்களது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் தொடரும் என்றார். புகார் கொடுத்த பின் வெளியே வந்த அதிமுகவினர் கோஷமிட்டதால் சிறிது நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories: