கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது. எனினும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள், கட்டுப்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்தலை நடத்தலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது எனவும், தேர்தலை தள்ளிவைக்க கோரியும் தமிழக அரசின் ஓய்வுபெற்ற  மருத்துவர் நக்கீரன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், மூத்த  வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். நாளுக்கு நாள் 17 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஐ.சி.யு.வில்  அனுமதிக்கப்படும் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் தெருக்கள் தொற்று பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் தேர்தலை நடத்துவது பொதுமக்களின் உயிருடன் விளையாடுவது போன்றாகும். உச்ச நீதிமன்றம் அந்தந்த மாநிலங்களின் நிலையை கருதி முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது என்றார்.

மற்றொரு மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிடும்போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநில தேர்தல் ஆணையம் மாநில அரசிடம் ஆலோசனை செய்த பிறகுதான் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றார். மற்றொரு மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தால் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் இருக்குமா, அதே நிலைதான் தற்போதும் உள்ளது. கொரோனா அலை உச்ச நிலையில் இருக்கும்போது தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம் என்று வாதிட்டார்.

அப்போது, மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீலிடம், நீங்கள் மாநில அரசுடன் விவாதித்தீர்களா என்று கேட்டனர். அதற்கு, பொதுவாக மாநில அரசுடன் ஆலோசனை நடத்தியபிறகுதான் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்குவோம். இப்போதும், தமிழக சுகாதாரத்துறையிடம் ஆலோசனை நடத்தினோம் என்றார். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் வாதிடும்போது, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அப்போதைக்கப்போது அறிவுறுத்தல்களை கூறியுள்ளது என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: தற்போதுள்ள கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர். மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தேர்தல் தொடர்பாக உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையும், சட்டப் பேரவை தேர்தலையும் போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வீடுவீடாக வாக்கு சேகரிப்பை நடத்த முடியாது. அப்படி வீடு வீடாக வாக்கு சேகரித்தால் கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கும். தேர்தலின் போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க செல்வர் என்பதால், வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்களிப்பவர்களும், வாக்களிக்காதவர்களும் பாதிக்கப்படுவர். தொற்று பரவலை பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரமல்ல. அரசியல் சாசனத்தின்படி, பொது சுகாதாரத்தை பேணுவது அரசின் கடமை என்பதால் நிலை சீராகும் வரை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்.

ஏற்கனவே, ஐந்து ஆண்டுகள் தேர்தல் நடத்தாத நிலையில், தற்போது நடத்த அவசரமில்லை. கொரோனா மூன்றாவது அலை தணியும் வரை காத்திருக்கலாம். திருமணம், இறுதிச்சடங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும். குடியரசு தினத்தை ஒட்டி நடத்தப்பட வேண்டிய கிராமசபை கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொது தேர்தலில் வாக்களிக்க இயலாத மாற்றுத் திறனாளிகள், முதியோர், கொரோனா பாதித்தவர்களுக்கு தேர்தலில் பங்களிக்க வகை செய்யப்பட்டதாகவும், உள்ளாட்சி தேர்தலில் இதுபோன்ற விதிகள் இல்லை என்றும் வாதிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கும்படி கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அடிப்படை உரிமை, சட்ட உரிமைகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றாலும், நீதித்துறை ஒழுங்குபடி உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது.

மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி தேர்தலை தள்ளிவைக்க கோரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. மாநில தேர்தல் ஆணையம் தான் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட எவர் வேண்டுமானாலும் அங்கே அணுகலாம். ஏற்கனவே கொரோனா தடுப்பு விதிகளை கடந்த டிசம்பர் 10ம் தேதியே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், தேர்தலை தள்ளிவைக்க மாநில தேர்தல் ஆணையம் கோரவில்லை.

மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை என்பதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. தேர்தல் நடத்துவதில் தாமதத்தை கருத்தில் கொண்டு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர்கள் வாதத்தை ஏற்று தேர்தலை தள்ளிவைக்க முடியாது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகள், தனிமனித விலகல் விதிக்கப்பட்டுள்ளதாலும் அவற்றை முறையாக பின்பற்ற அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிடப்படுகிறது.

வேட்பாளர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தேர்தலை தள்ளிவைக்கக் கூடாது என்ற மாநில அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. விதிமீறல் இருந்தால் நீதிமன்றத்தின் கவனத்துக்கு மனுதாரர்கள் கொண்டு வர வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தேர்தல் 5 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படவில்லை. அந்த செயல்பாடு தொடரக் கூடாது. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளை தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்க கூடாது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 10 நாட்களுக்கு பின் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

* உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்று செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பளித்துள்ளது.

* கொரோனா தடுப்பு விதிகளை கடந்த டிசம்பர் 10ம் தேதியே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், தேர்தலை தள்ளிவைக்க ஆணையம் கோரவில்லை.

* மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி தேர்தலை தள்ளிவைக்க கோரலாம்.

Related Stories: