காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி கொலையா?.. திருமணமான 2 மாதத்தில் விவசாய நிலத்தில் சடலம்

ஸ்ரீகாளஹஸ்தி: காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, விவசாய நிலத்தில் மர்மமான முறையில் சடலமாக கிடந்தார். அவரை யாராவது கொலை செய்தார்களா, அல்லது எப்படி இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பி.கொத்தக்கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிகா(19). இவர் மதனப்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் படிகாயலப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீனிவாசலு(24) என்பவரும் காதலித்துள்ளனர்.

அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காதல் ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதுபற்றி இருவரும் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு காதல் தம்பதியினர் தங்கள் வீடுகளிலேயே வசித்து வந்தனர். இதற்கிடையில் ஹாரிகா நேற்று முன்தினம் பைக் ஓட்ட பழக செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று பெத்ததிப்பசமுத்திரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு இளம்பெண் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் பி.கொத்தக்கோட்டா போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான கல்லூரி மாணவி ஹாரிகா என தெரிய வந்தது.

இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பி.கொத்தக்கோட்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து ஹாரிகாவை யாராவது ெகாலை செய்து விவசாய நிலத்தில் வீசினார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: