இன்று தேசிய வாக்காளர் தினம்; ஓட்டு போட வழிகாட்டும் ‘கூ’ ஆப்ஸ்: 5 மாநில தேர்தலில் முதன்முறையாக அறிமுகம்

புதுடெல்லி: 5 மாநில வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக அவர்களுக்கான வழிகாட்டியை ‘கூ’ ஆப்ஸ் மூலம் தேர்தல் ஆணையம் செய்துள்ளதாக, கூ ஆப்சின் நிர்வாகி தெரிவித்தார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய  மாநிலங்களில் வரும் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல்  நடைபெறுகிறது. மொத்தம் 690 சட்டசபை தொகுதிகளில் உள்ள 18.3 கோடி  வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி (இன்று) தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட  இந்த நடைமுறையின் மூலம் புதிய வாக்காளர்களின் சேர்க்கையை ஊக்குவிப்பதையும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் மைக்ரோ பிளாக்கிங் தளமான ‘கூ’ செயலி மூலம் வரவிருக்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்கும் வாக்காளர்களின் வசதிக்காக, வாக்காளர்களின் உரிமைகள், பொறுப்புகள் குறித்த வழிகாட்டியை  இந்தி, மராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் வெளியிட்டுள்ளது. அதில், வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்னும் பின்னும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தேர்தல் செயல்பாட்டில் நம்பிக்கையை வளர்ப்பதிலும், வெளிப்படையான, பக்கச்சார்பற்ற மற்றும் நம்பகமான சமூக ஊடக பங்களிப்பாளராக ‘கூ’ செயலியில் தகவல்கள் கிடைக்கின்றன. இதுகுறித்து ‘கூ’ செயலியின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணா கூறுகையில், ‘தேர்தல் ஆணையத்துடன் இணைந்து ஒவ்வொரு வாக்காளரின் அறிவை வளப்படுத்தவும், தேர்தல் செயல்பாட்டில் அதிக நம்பிக்கையை வளர்க்கவும் வாக்காளர் வழிகாட்டியை உருவாக்கி உள்ளோம். முதற்கட்டமாக நான்கு மொழிகளில் வெளியிட்டுள்ளோம்’ என்றார்.

Related Stories: