‘டெட்’ வினாத்தாள் கசிவு வழக்கில் 28 எப்ஐஆர்; 89 பேர் கைது: உத்தரபிரதேச போலீஸ் அதிரடி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் டெட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 28 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, 89 பேரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வின் வினாத்தாள்  கடந்த நவம்பர் 28ம் தேதி சமூக ஊடகங்கள் மூலம் கசிந்தது. அதனால்  உத்தரப் பிரதேச ஆசிரியர் தகுதித் தேர்வு (UPTET) ரத்து செய்யப்பட்டது.  இவ்விவகாரம் ெதாடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இவ்வழக்கை உத்தரபிரதேச சிறப்பு  அதிரடிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட  மேலும் 56 பேரை உத்தரப் பிரதேச போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் பிரசாந்த்  குமார் கூறுகையில், ‘கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆசிரியர் தகுதித் தேர்வின் வினாத்தாள் கசிவு முறைகேடு விவகாரத்தில் ஈடுபட்ட 33 பேரை கைது செய்தோம். திங்களன்று 56 பேரை கைது செய்தோம்.

மொத்தம் கடந்த 2 நாட்களில்  89 பேரை கைது செய்து செய்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்களில் 80 பேர் வினாத்தாளை லீக் செய்தவர்கள், எட்டு பேர் தேர்வர்கள், ஒருவர் வினாத்தாள் கசிவு குறித்து வதந்தி பரப்பியவர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 89 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 28 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

Related Stories: