உத்தரபிரதேசத்தில் காங். தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் ஜி-23 மூத்த தலைவர்கள்

புதுடெல்லி: உத்தரபிரதேச தேர்தலுக்காக காங்கிரஸ் வெளியிட்டுள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் ஜி-23 தலைவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 58 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் எதிர்கட்சியான காங்கிரஸ், உத்தரபிரதேசத்தில் பலவீனமாக இருக்கும் நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தீவிர முயற்சியால் வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட நட்சத்திர பேச்சாளர்கள் 30 பேர் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் தேவை; கட்சியின் நிறுவன அமைப்புகளை மாற்றியமைக்கக் கோரிய 23 மூத்த தலைவர்களின் (ஜி-23) பெயரும் இடம் பெற்றுள்ளது. அதன்படி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, முன்னாள் எம்பி ராஜ் பப்பர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கோஷ்டி அரசியல் செய்த அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச தேர்தல் பொறுப்பாளரும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மாநில கமிட்டி தலைவர் அஜய்குமார் லல்லு, ஒன்றிய முன்னாள் அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், ஆர்.பி.என்.சிங், முன்னாள் எம்பிக்கள் பிரமோத் திவாரி, பி.எல்.புனியா, இளம் தலைவர்கள் தீபிந்தர் சிங் ஹூடா, கன்னையா குமார் உள்ளிட்ட 30 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Related Stories: