திருச்சியில் சணல் வெடி வெடித்த போது கை விரல்கள் துண்டாகி சிறுவன் படுகாயம்

முசிறி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா அழகியமணவாளம் அருகே அழிஞ்சகரை கிராமத்தை சேர்ந்தவர் மருதை. இவரது மனைவி லட்சுமி, மகன் சூர்யா (16). கடந்த 3 வாரங்களுக்கு முன் மருதை இறந்து விட்டார். இதனால் லட்சுமி, தனது மகன் சூர்யாவுடன் தனியாக வசித்து வருகிறார். 10ம் வகுப்பு வரை படித்த சூர்யா, தற்போது பொக்லைன் ஆபரேட்டர் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு வருடாந்திர பூஜை நேற்று நடந்தது.

காலை பூஜைகள் முடிந்த பிறகு மாலையில் சூர்யா தீபாவளிக்கு வாங்கியதில் மீதம் இருந்த பட்டாசுகளை தன் வீட்டிலிருந்து எடுத்து வந்து கோயில் முன்பு வெடித்தார். அப்போது வெடிக்காமல் கிடந்த ஒரு சணல் வெடி பட்டாசை சூர்யா எடுத்தபோது திடீரென வெடித்ததில் அவரது வலது கையில் 3 விரல்கள் துண்டானது. வலியால் அலறி துடித்த சூர்யாவை அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: