நடிகை பலாத்கார வழக்கில் மீண்டும் பரபரப்பு; திலீப் சொன்னதால்தான் என் மகன் பலாத்கார திட்டத்துக்கு சம்மதித்தார்: சுனில் குமார் தாயார் பேட்டி

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடிகர் திலீப், அவரது தம்பி அனூப், தங்கை கணவர் சுராஜ், அப்பு, பைஜூ ஆகியோரிடம், கடந்த 2 நாளாக கொச்சி குற்றப்பிரிவு போலீசார் 22 மணி நேரம் விசாரணை நடத்தினர். அனைவரையும் தனித் தனியாகவும், பின்னர் ஒன்றாக வைத்தும் விசாரித்தனர். இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தது. முதல் நாள் விசாரணையிலேயே, போலீஸ் அதிகாரிகளை கொல்ல திலீப் சதி திட்டம் தீட்டியது உண்மை என்று விசாரணைக்கு ஆஜரான ஒருவர் ஒப்பு கொண்டார். இது போலீசுக்கு மிகுந்த பலமாக அமைந்துள்ளது. அவரது பெயரை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

நேற்று பிரபல டைரக்டரும் கதாசிரியருமான ராபி, திலீப்பின் பட நிறுவன மேலாளர் ஆகியோரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு ராபி கூறுகையில், ‘திலீப்பின் படத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பாலசந்திரகுமார் எனக்கு போன் செய்தார். இதை விசாரணையின் போது போலீசிடம் தெரிவித்தேன்’ என்றார். ஆனால் பாலசந்திரகுமார் படத்தில் இருந்து விலகியதாக திலீப் முதலில் கூறியிருந்தார். தற்போது பாலசந்திரகுமார் முதலில் விலகியதாக போலீசிடம் ராபி கூறியிருப்பது திலீப்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இன்று 3வது நாளாக திலீப் உள்பட 5 பேரும் காலை 9 மணிக்கு முன்னதாகவே விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை மறுநாள் (வியாழக்கிழமை), விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கிடையே வழக்கில் கைதான முக்கிய நபரான சுனில்குமாரின் தாயார் சோபனா, நேற்று எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் கொடுத்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகன் சுனில்குமார் கடும் மன உளைச்சலில் உள்ளார். உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படுகிறார்.

திலீப் சொன்னதால்தான் சுனில் குமார், நடிகையை பலாத்காரம் செய்யும் திட்டத்துக்கு சம்மதித்தார். நான் எனது மகனை இன்று (நேற்று) சிறையில் சந்தித்தேன். பல விவரங்களை என்னிடம் கூறினார். அவற்றை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளேன். டைரக்டர் பாலசந்திரகுமார் போல உண்மையை கூற ேமலும் பலர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் உயிருக்கு பயந்து யாரும் எதுவும் கூற மறுத்து வருகின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: