கோவை அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின

பெ.நா.பாளையம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்த நிலையில், அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருப்பவர் கே.வி.என்.ஜெயராமன். இவர், 2 முறை வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக இருந்துள்ளார். இவரது வீடு 7வது வார்டு ராமசந்திரா நகரில் உள்ளது. வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயராமன் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் 5 அதிகாரிகள் நேற்று மதியம் ஜெயராமன் வீட்டிற்கு வந்தனர். குடும்பத்தினருடன் அவர் இருந்தார். உள்ளே சென்ற போலீசார், மெயின் கேட், வீட்டின் கதவுகளையும் உட்புறமாக பூட்டி விட்டு சோதனையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த அதிமுகவினர், ஜெயராமன் வீட்டின் முன் திரண்டு கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி வரை இந்த சோதனை நடந்தது. சுமார் 10 மணி நேரம் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இது பற்றி ஜெயராமன் கூறுகையில், ‘‘என்னிடம் உள்ள அனைத்து சொத்துக்களுமே எனது உழைப்பில் வாங்கியது. எல்லாவற்றிற்கும் ஆவணங்கள் உள்ளன. சோதனையில் ஒன்றும் கைப்பற்றப்படவில்லை. ஆளும் கட்சியின் இந்த மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்’’ என்றார்.

Related Stories: