×

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த, முப்படை தளபதி பிபின் ராவத் ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் தயாராகிறது: டெல்லி போர் நினைவு சின்னத்தில் நிறுவ ஏற்பாடு

கும்பகோணம்: குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை, கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலையை டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி தலைமையில் நிறுவ போவதாக முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில், பயிற்சி பெற்று வரும் வீரர்களிடையே உரை நிகழ்த்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த டிசம்பர் 8ம் தேதி இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டரில் சென்றார். இலக்கை அடைய 10 நிமிடம் இருந்த நிலையில் குன்னூர் பகுதியில் ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.

இதில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்கும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த பிபின் ராவத்தின் வீரத்தை போற்றும் விதமாக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பேர் பவுண்டேஷன் சார்பில் 120 கிலோ எடையில் அவரது மார்பளவு ஐம்பொன் சிலை தயாரித்து அதனை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு செய்தனர். அதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சிற்ப கூடத்தில் ஐம்பொன்னினால் ஆன பிபின் ராவத் சிலை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக களிமண்ணில் அவரது உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகிய உலோகங்கள் அடங்கிய ஐம்பொன்களை காய்ச்சி பிபின்ராவத் களிமண் சிலை மீது ஊற்றி முழு உருவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிலையை தயார் செய்ய ஏற்பாடு செய்துள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், இறுதி வடிவம் பெற்று வரும் பிபின் ராவத் சிலையை நேரில் பார்வையிட்டனர். பின்னர் முன்னாள் ராணுவ கேப்டன் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘வீரமரணம் அடைந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு மரியாதை செய்யும் விதமாக முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் இணைந்து அவருக்கு ஐம்பொன் சிலை செய்து நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நாட்டுப்பற்றை உருவாக்கும் விதமாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து புறப்பட்டு 8 மாநிலங்கள் வழியாக சிலையை டெல்லி கொண்டு செல்லும் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா கேட் போர் நினைவு சின்னம் அருகில் பிரதமர் மோடி தலைமையில் இந்த சிலையை சமர்ப்பிக்க விரும்புகிறோம்’ என்றார்.

Tags : Bipin Rawat ,3rd Battalion ,Kumbakonam ,Delhi War Memorial , Statue of Brigadier General Bipin Rawat killed in helicopter crash
× RELATED கும்பகோணம் சாரங்கபாணி கோயில்...