பஞ்சாப்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... மக்களிடம் கருத்து கேட்ட பின்பே பட்ஜெட்: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

சண்டிகர்: பஞ்சாப்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களிடம் கருத்து கேட்ட பின்னரே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், ‘பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தால், மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக பொதுமக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஊழியர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும்.

டெல்லி ஆம் ஆத்மி அரசு 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் விவாதங்களைத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக சாமானியர்கள் முதல் அனைவரிடமும் ஆலோசனைகள் கேட்கப்படுகின்றன. இதேமுறை பஞ்சாபிலும் பின்பற்றப்படும்’ என்றார். ஏற்கனவே மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்திய பிறகு அம்மாநில ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் என்பவரை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: