ஒகேனக்கல் 2.0 கூட்டுக்குடிநீர் திட்டத்தை எதிர்ப்பது அதிகார அத்துமீறல்: கர்நாடகா முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிடைக்கும்நிலத்தடி நீரில் புளோரைடு அளவுக்கு மீறி அடர்த்தியாக இருப்பதால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துமாறு நீண்ட காலம் போராடினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பொருட்டு அப்போதைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அடிக்கல் நாட்டிட, அப்போது துணைமுதலமைச்சராக இருந்து உள்ளாட்சித்துறைக்கு பொறுப்பு வகித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி மேற்பார்வையில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்பது முற்றிலும் தமிழ்நாடு எல்லைக்குள் அமைந்திருக்கிறது. பிலிகுண்டுலுவுக்கு கீழ் பகுதியில் தமிழ்நாட்டிற்கு சட்டபூர்வ உரிமையுள்ள தண்ணீரை ஆதாரமாக கொண்டது, இதில் கர்நாடக அரசு கருத்து சொல்வதற்கு எந்தவித உரிமையும் இல்லை என தெரிவித்துள்ளது. மேகதாது அணை கட்டும் பிரச்சனையை திசை திருப்ப கர்நாடக முதலமைச்சர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்ப்பது அதிகார அத்துமீறல் ஆகும்; தமிழ்நாடு மக்களின் ஆத்திரத்தை தூண்டும் மலிவான செயலாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஓகேனக்கல் கூட்டுகுடிநீர் 2.o திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டு கொண்டுள்ளது.                 

Related Stories: