×

இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடுவதை தடுத்து நிறுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை : இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விட இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையைக் கண்டித்தும், இலங்கை அரசின் இந்தச் செயலை உடனடியாக நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
     
இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசின்  மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை 7-2-2022 முதல் 11-2-2022 வரை  ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வதாக வந்த செய்தியறிந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கவலையையும், வேதனையையும் தெரிவித்து, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவானது மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏலம் விடுவதற்கான அறிவிப்பு துரதிஷ்டவசமானது என்றும்,  நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண முன்வந்துள்ள தமிழக மீனவர்கள் மத்தியில் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
     
இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள மீட்க இயலாத 125 தமிழக மீன்பிடிப் படகுகளை அப்புறப்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் வழிமுறைகளை இறுதி செய்வதற்கு ஒரு தொழில்நுட்பக் குழுவை இலங்கைக்கு அனுப்புமாறு ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அதனடிப்படையில் மீன்பிடிப் படகுகளை ஆய்வு செய்து, அப்புறப்படுத்துவதை மேற்பார்வையிடவும், விற்பனை வருவாயை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பவும், தமிழகத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, அவர்களின் இலங்கை பயண விவரங்களையும் ஒன்றிய வெளியுறவுத் துறைக்குத் தெரிவித்துள்ளதாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
     
இத்தகைய சாதகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறை, இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீன்பிடிப் படகுகளை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளதாக இலங்கை மற்றும் தமிழ்நாட்டிலுள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இலங்கை அரசு முறையாக கலந்தாலோசனை மேற்கொள்ளாமல் ஏலத்தை நடத்த அவசரம் காட்டுவது, வாழ்வாதாரத்தை இழந்த தமிழக ஏழை மீனவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்திய தூதரகமும், தமிழக அரசும் மேற்கொண்டுவரும் முயற்சிகளை பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.  மேலும், இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு பல்வேறு துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் அனைத்தும் இலங்கையிலுள்ள பல்வேறு நீதிமன்றங்களால் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
    
தமிழக மீனவர்களின் படகுகளை, எவ்வித சட்டபூர்வமான உரிமையும் இல்லாத இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறை ஏலம் விட உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தைத் திரும்பப் பெறவும், இந்திய அரசின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் கொண்டு இலங்கை அரசுக்கு இந்திய அரசின் மறுப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்யுமாறும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், 2018 ஆம் ஆண்டுக்கு முன் கைப்பற்றப்பட்ட மற்றும் பழுதுபார்க்க இயலாதெனக் கருதப்படும் 125 தமிழகப் படகுகளை ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு தொடர வேண்டும் என்றும், இலங்கை கடற்படையினரால் 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை முன்கூட்டியே விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும், ஒன்றிய அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிடவேண்டுமென்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இந்திய பிரதமரை தனது கடிதத்தின் வாயிலாகக்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Stalin ,Modi ,Sri Lanka , இலங்கை ,விசைப்படகு,மு.க. ஸ்டாலின்
× RELATED பருத்தி நூல் விலை உயர்வை...