விழுப்புரம் அருகே கல்லூரி மாணவரை வழிமறித்து கூகுள் பே மூலம் வழிப்பறி - 5 பேர் கும்பல் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காரில் சென்ற கல்லூரி மாணவரை வழிமறித்த கும்பல் கூகுள் பே மூலம் பணம் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடலூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் மரக்காணம் அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி அருகே மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிரின்ஸ் சென்ற காரை வழிமறித்துள்ளனர். பிரின்ஸ் சென்ற காரில் மேலும் 3 பேர் ஏறிக்கொண்டு மரக்காணம் நோக்கி சென்றுள்ளனர். காரில் இருந்து இறங்கிய கும்பலில் 3 பேர் பிரின்ஸை மிரட்டிய காருடன் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காரில் செல்லும் போது பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மரக்காணம் தீர்த்தவாரி சாலை அருகே வந்த போது அந்த கும்பல் காரை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பிரின்ஸ் கையில் பணம் இல்லை என்று கூறியதும் கூகுள் பே மூலம் ஒரு நபருக்கு 10,000 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். ரூ.10,000ஐ பெற்று கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து பிரின்ஸ் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்தனர். விசாரணையில் மரக்காணத்தை சேர்ந்த சேகர் பாபுவின் மகன் சவுபர்சாதிக், அஜித்குமார், பாலமுருகன், வினோத் உள்ளிட்ட 5 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: