குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: டெல்லியில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா பேரணியில் அனைத்து மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் கலந்துகொள்வது வழக்கம். இந்தியா குடியரசான ஆண்டிலிருந்து இந்த நடைமுறை உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், திருவல்லிகேணியைச் சேர்ந்த பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தின் அலங்கார ஊர்திகளை பேரணியில் இடம்பெற உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் மற்றும் நிராகரித்த உத்தரவு நகல் உள்ளதா என கேள்வி எழுப்பினர். இதற்கு, எழுத்துபூர்வமான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், முதல்வரும் இதை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அணிவகுப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்தது, நிராகரித்தது தொடர்பான ஆவணங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. மேலும், கடைசி நேரத்த்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதால், இதில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: