கயத்தாறில் மர்ம சாவு இளம்பெண் உடலுடன் உறவினர்கள் மறியல்

கயத்தாறு :  கயத்தாறில் இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை கைவிட்டனர்.   கயத்தாறு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை மனைவி ஜோதியம்மாள் (25). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜோதியம்மாள் கயத்தாறு அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் பசுக்களை பராமரிக்கும் வேலை செய்து வந்தார்.

கடந்த 22ம் தேதி மதியம் ஜோதியம்மாள் கயத்தாறிலிருந்து வடக்கு மயிலோடை செல்லும் ரோட்டில் தலையில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜோதியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுபற்றி அறிந்த கயத்தாறு போலீசார் ஜோதியம்மாள் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதியம்மாளின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறிவந்த நிலையில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் உத்தரவின் பேரில் ஆய்வாளர்கள் முத்து, சபாபதி, பத்மாவதி, உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று மதியம் பிரேத பரிசோதனை முடிந்து ஜோதியம்மாள் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கயத்தாறு கொண்டு வரப்பட்டது. அப்போது கயத்தாறிலிருந்து கடம்பூர் செல்லும் சாலையில் ஜோதியம்மாளின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். தகவலறிந்த கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், கயத்தாறு வட்டாட்சியர் பேச்சிமுத்து, துணை வட்டாட்சியர் திரவியம் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 ஜோதியம்மாளின் மரணத்திற்கு காரணம் விரைவில் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் ஜோதியம்மாளின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டதன் பேரில் ஜோதியம்மாள் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனா். இதையடுத்து உடல் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தினால் கயத்தாறு-கடம்பூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: