×

சிறுவன் உடல் அடக்கத்தில் ஊரே திரண்டு கதறல் கண்ணீரில் மிதந்த கடற்கரை கிராமம் - பெண்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு

குளச்சல் : கடியப்பட்டணத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவனின் உடல் அடக்கத்தில் நேற்று கிராம மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கதறி அழுது மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்த ஜாண் ரிச்சர்டு - சகாய சில்ஜா தம்பதியரின் 4 வயது மகன் ேஜாகன் ரிஜி. கடந்த 21ம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஜோகன் ரிஜியை அதே பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவர் ஒன்றரை பவுன் நகைக்கு ஆசைப்பட்டு கொடூரமாக கொலை செய்து பீரோவில் உடலை மறைத்து வைத்தார். பின்னர் போலீஸ் விசாரணையில் இந்த சம்பவம் தெரிய வந்து, பீரோவில் மறைத்து வைக்கப்பட்ட சிறுவன் உடலை போலீசார் மீட்டு, பாத்திமாவை கைது செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக பாத்திமா, காவல் நிலையத்தில் அளித்த வாக்குமூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகையை கழட்டும் போது சிறுவன் ஜோகன் ரிஜி அழுததால், வாயை துணியால் கட்டியவர், கை, கால்களையும் கட்டி உள்ளார். பின்னர் கழுத்தை நெரித்ததுடன், கீழே படுக்க வைத்து தலையணையால் முகத்தை அமுக்கி அதன் மீது ஏறி அமர்ந்து திணறடித்து சிறுவனை கொன்றுள்ளார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக பாத்திமாவின் கணவர் ஷரோபின் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்து இருப்பது தெரிந்தும், அதை மறைத்து மனைவியுடன் சேர்ந்து உடலை கடலில் வீச திட்டமிட்டதாக பாத்திமாவின் கணவர் ஷரோபினை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான இருவரும் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கொரோனா பரிசோதனை முடிந்து பாத்திமா தக்கலை மகளிர் சிறையிலும், ஷரோபின் குழித்துறை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை ஜாண் ரிச்சர்டு, சவூதியில் வேலை பார்த்து வருகிறார். மகன் இறந்த தகவல் அறிந்ததும் அங்கிருந்து புறப்பட்ட அவர், நேற்று முன் தினம்  மாலை ஊருக்கு வந்தார். மகனின் புகைப்படம் முன் அமர்ந்து அவர் கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். நேற்று காலை சிறுவனின் உடல், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்சில் இருந்து உடலை இறக்கியதும் அங்கு திரண்டு இருந்த ஏராளமான பெண்கள், ஆண்கள் கதறி அழுதனர்.

அந்த கிராமம் முழுவதுமே கண்ணீரில் மூழ்கியது போல், பெண்களின் கதறல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திடீரென சிறுவனின் தாயார் சகாய சில்ஜா மயங்கினார். மேலும் உறவினர்கள் சில பெண்களும் கதறியவாறு மயங்கினர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், நசரேத்பசிலியான் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். சிறுவனின் உடல் அடக்கம் நடந்தையொட்டி டி.எஸ்.பி.தங்கராமன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தில்லாலங்கடி பாத்திமா...

பாத்திமா பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். பக்கத்தில் உள்ளவர்களிடம் பாசமாக பேசி பணம், நகைகள் வாங்கி ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2017 ல் மணவாளக்குறிச்சியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ₹12 லட்சத்துக்கு போலி நகை அடகு வைத்து மோசடி செய்த வழக்கு உள்ளது. இதில் ₹4 லட்சம் கொடுத்துள்ளார். மீதி பணம் கொடுக்க வில்லை. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த ெகாலை சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன், பக்கத்து வீட்டு விஷேச நிகழ்ச்சிக்கு வந்த பெண் ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து ெகாடுத்து அவர் அணிந்திருந்த தாலி செயினை திருடியதாகவும், இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து கண்டித்த பின் செயினை திரும்ப கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் பிறந்தநாள் வீட்டில் சிறுவன் அணிந்திருந்த நகையை பறிக்க முயலும் போது பாத்திமா பிடியில் சிக்கியதாகவும், பின்னர் நழுவி தப்பியதாகவும் கூறப்படுகிறது.

அநாதையாக 2 குழந்தைகள்

சிறுவன் கொலை வழக்கில் கைதாகி உள்ள பாத்திமா, ஷரோபின் தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றதால் இந்த இரு குழந்தைகளும் கவனிப்பார் இல்லாத நிலையில் உள்ளனர். அவர்கள் பாதுகாப்பு காரணம் கருதி உறவினர் வீட்டில் உள்ளனர். அவர்களை காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பெற்றோர் செய்த தவறால், பிள்ளைகள் அநாதையாகி இருப்பதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kulachal: Villagers gathered yesterday to pay their respects to the body of a boy who was brutally killed in Katiyapatnam. Women
× RELATED நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி...