தரமற்ற உணவு வழங்கிய மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை : போக்குவரத்துத்துறை

சென்னை : பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் பேரில், தரமற்ற உணவு வழங்கிய மாமண்டூர் பயண வழி உணவகத்தில், அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு,

தமிழகத்தில், அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலை பெறுவதாக, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களுக்கு வரபெற்ற புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் சொந்தமான M/S Star Associates Salem ஒப்பந்ததாரர் நடத்தும் மாமண்டூர் பயண வழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 29/12/2021 அன்று கழக அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு உணவு சுகாதாரமின்றி, தரமற்றதாக உள்ளது எனவும், அனைத்து உணவுப் பொருட்களின் விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, மேற்கண்ட குறைகளை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்து, விபரத்தை தெரிவிக்குமாறு 31/12/2021 அன்று புகார் அறிக்கை M/S  Star Associates Salem ஒப்பந்ததாரருக்கு அனுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மீண்டும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 20/01/2022 அன்று கழக அலுவலர்கள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவு வழங்குவது, விற்பனை விலையை விட அதிகம் விற்பனை செய்தது மற்றும் உணவுக் கூடம் சமையலறை, மற்ற வளாகங்கள் சுகாதார சீர்கேடான  நிலையில் உள்ளதை கண்டறிந்து 21/01/2022 அன்று மீண்டும் புகார் அறிக்கையை அதே நிறுவன (M/S  Star Associates, Salem) ஒப்பந்ததாரருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் 25/01/2022 அன்றைய விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் அவர்கள் தலைமையில், அலுவலர்கள் ஆய்வு மேற்கண்ட போது, அந்த உணவகம் குறைபாடுகள் ஏதும் சரி செய்யாத நிலை கண்டறியப்பட்டு, அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகள் 25/01/2022 காலை முதல் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், உடனடியாக மேற்கண்ட M/S  Star Associates Salem, ஒப்பந்ததாரர் அவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அரசு பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் அனைத்திலும் ஆய்வுகள் நடத்தப்படும். தரம் குறைவாக உணவு மற்றும் கூடுதல் விலைக்கு வழங்கும் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, தரமான உணவு மற்றும் குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: