குடியரசு தினத்தை முன்னிட்டு அணிவகுப்பிற்கு செல்லும் பீரங்கிகள் தயார்: 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதி

டெல்லி: குடியரசு தின விழாவிற்கான இறுதிக்கட்ட பாதுகாப்பு மற்றும் ஏற்பாடு பணிகள் மும்முரமான முறையில் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நாளைய தினம் அணிவகுப்பிற்காக கலந்துகொள்ள கூடிய ராணுவ வாகனங்கள், டாங்குகள் உள்ளிட்டவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டாங்குகளை தயார்படுத்தி சுத்த படுத்தக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பு வாகனங்கள் குடியரசுதினத்தின் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கும், அதற்காக இந்த ஏற்பாடு பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

அதேவேளையில் பாதுகாப்பு பணிகள் என்பதும் மிகவும் தீவிரமான முறையில் நடைபெற்றுவருகிறது. டெல்லியில் உள்ள முக்கிய சாலைகளில் மூட்டைகள் கொண்ட தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருக்கக்கூடிய முக்கியமான கட்டிடங்கள் அனைத்தும் இன்று மதியத்திலிருந்தே மூடப்பட உள்ளது. மாலையில் இருந்து மெட்ரோ ரயில் சேவையும் படிப்படியாக குறைக்கப்படும். நாளைய தினம் மெட்ரோ ரயில் சேவை மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.

3 கட்ட பாதுகாப்புகளுடன் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவர். அணிவகுப்பு செல்லக்கூடிய முக்கியமான சாலைகளில் போக்குவரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணைராணுவப்படையினர் மட்டுமே குறைந்தது 10,000- க்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி காவல்துறையை சேர்ந்த 28,000 பேர் துணை ராணுவப்படையினருக்கு துணையாக களமிறக்கப்பட்டுள்ளனர். ஆண்டி டிரோன் சர்வைலென்ஸ் மூலமாக டிரோன்கள் பறப்பது கண்காணிக்கப்படுகிறது.

இதைத்தவிர லோ ஃபிளை ஜோனாக டெல்லி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள், சிறிய ரக விமானங்கள் போன்றவை எல்லாம் பறப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரோன்கள் மூலமாக குடியரசு தின நிகழ்ச்சிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை வழங்கிய எச்சரிக்கையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்று அதிகமுள்ள சூழலில் உள்ளே வரக்கூடிய பயணிகள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.       

Related Stories: